எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில், பஸ் மறியல்; 200 பேர் கைது


எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில், பஸ் மறியல்; 200 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 4:45 AM IST (Updated: 18 Dec 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

திருமாவளவனை அவதூறாக விமர்சித்த எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி ரெயில், பஸ் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவனை அவதூறாக விமர்சித்த பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை வில்லியனூர் சுல்தான்பேட்டை ரெயில் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர்.

அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி சென்ற பயணிகள் ரெயில் சுல்தான்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதைப்பார்த்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், தொகுதி செயலாளர் தமிழ்வளவன், கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், எழில்மாறன், வாகையரசு மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், வேலய்யன் மற்றும் போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருபுவனை சந்திப்பில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் தொகுதி செயலாளர் விடுதலைச்செல்வன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விடுதலைவளவன், அன்பரசன், திருநாவுக்கரசு, ஜெகன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போலீசாரின் சமரசத்தை ஏற்று மறியலை கைவிட மறுத்துவிட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story