ராஜபாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; 3 பேரை பிடித்து விசாரணை
ராஜபாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் அழகைநகர் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லாத நிலையில், அது எப்போதும் திறந்தே கிடந்ததாக கூறப்படுகிறது.
நேற்று வழக்கத்திற்கு மாறாக பூட்டிக்கிடந்தது. மேலும் அருகே நெளிந்த நிலையில் கடப்பாரை ஒன்றும் கிடந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவும் வேறு பக்கமாக திருப்பி விடப்பட்டு இருந்தது.
இதை பார்த்து சந்தேகம் கொண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் எந்திரத்தின் மேல் பகுதியை மட்டும் உடைத்து விட்டு, உள் பகுதியை உடைக்க முடியாமல் விட்டுச் சென்று இருப்பதும், பணம் பத்திரமாக இருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இந்த கொள்ளை முயற்சி நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.