கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 7:21 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாங்கண்ணியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணியை அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று அனைத்து கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி குணசேகரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துபெருமாள், தி.மு.க. ஊராட்சி செயலாளர் கணபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஆனந்த கைலாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதி விவசாயிகளின் பணப்பயிர்களுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும். நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தனியார் மகளிர் கடன் குழு கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் அம்பிகாபதி, செல்வராஜ், சாந்தி, அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகை மாலி கலந்துகொண்டு பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், சுபாதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story