பாகூர் அருகே தீ விபத்து 10 குடிசை வீடுகள் எரிந்து சேதம்


பாகூர் அருகே தீ விபத்து 10 குடிசை வீடுகள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:49 PM GMT (Updated: 21 Dec 2018 10:49 PM GMT)

பாகூர் அருகே தீ விபத்தில் 10 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

பாகூர்,

பாகூர் அருகே இருளஞ்சந்தை கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று மாலை 6 மணியளவில் அந்த வழியாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி விழுந்தது. இதில் அப்பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவரின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதையடுத்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். தங்களின் உடமைகளை வீட்டில் இருந்து வெளியே வீசி எரிந்தனர்.

இந்த பயங்கர தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி, வில்லியனூர் தீயணைப்பு நிலை அதிகாரி செல்வம் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 2 வண்டியில் விரைந்து சென்றனர். அவர்கள் கிராம மக்கள் உதவியுடன் பற்றி எரிந்த வீடுகளை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் செல்வராஜ், ஆறுமுகம், சேகர், ராஜவேலு, லலிதா, விஜி, ராஜி, ரங்கநாதன், காசிநாதன், செல்வம் ஆகியோரின் குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பொருட்களும் கருகியது. சேத மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வீரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் தீ விபத்து குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story