பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் சீரமைக்கும் பணி தீவிரம்


பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:47 PM GMT (Updated: 22 Dec 2018 10:47 PM GMT)

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பழனி,

பழனியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கொடைக்கானல் அமைந்துள்ளது. பழனி-கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியை அடுத்து மலைப்பாதையாக இருக்கிறது. இந்த மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த பாதை வழியாக தான் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்கு சென்று வருகின்றன.

விபத்துகளை தடுக்கும் வகையில் மலைப்பாதையோரத்தில் தடுப்பு சுவர்கள் உள்ளன. இவற்றில் சில உறுதித்தன்மையை இழந்து வருவதாக நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பழனி- கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு வரை அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை நெடுஞ்சாலைத் துறையினர்ஆய்வுசெய்தனர்.

அப்போது மலைப்பாதையில் 7 இடங்களில் உள்ள தடுப்பு சுவர்கள் சேதமடைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணிக் காக ரூ.10 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள தடுப்பு சுவர்களை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளால் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன கலவை எந்திரம் மூலம் மலைப்பாதையில் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் நிறைவடையும்’ என்றனர்.

Next Story