வாலாஜா வாலிபர் வெளிநாட்டில் குத்திக்கொலை - உடலை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு


வாலாஜா வாலிபர் வெளிநாட்டில் குத்திக்கொலை - உடலை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு
x
தினத்தந்தி 26 Dec 2018 5:00 AM IST (Updated: 26 Dec 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த வாலாஜாவை சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். உடலை மீட்டு தரக்கோரி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

வேலூர்,

வாலாஜா தாலுகா காவனூர், சாம்பசிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 25). இவருடைய மனைவி கலைச்செல்வி (23). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தரீக் (4) என்ற மகன் உள்ளான். வெங்கடேசன் சென்னையில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக அவர் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி அவர் சென்னையை சேர்ந்த ஒரு ஏஜென்சி மூலம் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி போலந்து நாட்டில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனியில் வேலைக்கு சென்றார். தினமும் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

இதேபோன்று கடந்த 23-ந் தேதி பிற்பகலில் மனைவி கலைச்செல்விக்கு போன் செய்து பேசியுள்ளார். அதைத்தொடர்ந்து அன்று இரவும், மறுநாளும் அவர் குடும்பத்தினரிடம் பேசவில்லை. குடும்பத்தினரும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து குடும்பத்தினர் ஏஜென்சியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த கம்பெனியை தொடர்பு கொண்டு விசாரித்தனர். வெங்கடேசன் தங்கி இருந்த அறையில் அவருடன் 4 ஊழியர்கள் தங்கி உள்ளனர். சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் அதை வெங்கடேசன் தடுக்க சென்றபோது கத்தியால் குத்தப்பட்டு இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதை கேள்விப்பட்ட வெங்கடேசனின் மனைவி கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்தநிலையில் தனது கணவரின் உடலை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு உரிய நிதி பெற்று தர வேண்டும் என்று கலைச்செல்வி தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார்.

பின்னர் அவர் கலெக்டர் அலுவலக பொது மேலாளர் முரளியிடம், கோரிக்கை மனுவை கொடுத்தார். அவர் இதுகுறித்து கலெக்டரின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story