ரெயில் பயணத்தின் போது பாதுகாப்புக்கு செல்போன் புதிய செயலியை பயன்படுத்துங்கள்; ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை


ரெயில் பயணத்தின் போது பாதுகாப்புக்கு செல்போன் புதிய செயலியை பயன்படுத்துங்கள்; ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணத்தின் போது பாதுகாப்புக்கு செல்போன் புதிய செயலியை பயன்படுத்துங்கள் என்று திருப்பூரில் ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மாணவ–மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருப்பூர்,

ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘ஜிஆர்பி ஹெல்ப்’ என்னும் செல்போன் செயலி ரெயில்வே போலீஸ் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கோவை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் வரவேற்றார்.

தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திர பாபு கலந்து கொண்டு ‘ஜிஆர்பி ஹெல்ப்’ என்ற செல்போன் செயலியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–

ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது ரெயில்வே போலீசாரின் கடமையாகும். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பாக ‘ஜிஆர்பி ஹெல்ப்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். ‘ஸ்மார்ட்போன்’ வைத்திருப்பவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த செயலியில் தகுந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

ரெயிலில் பயணம் செய்யும் போது உங்கள் அருகில் சந்தேக நபர்கள் இருந்தாலும், ஏதாவது தொந்தரவு செய்தாலும், பிரச்சினைகள் குறித்தும், பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில் இந்த செயலியை அழுத்தினால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு குறுந்தகவல் செல்லும். அடுத்த 2 நிமிடத்துக்குள் அந்த ரெயிலில் இருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் உங்களுக்கு வந்து பாதுகாப்பு அளிப்பார். உங்கள் குறைகளை நிவர்த்தி செய்வார். மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு இந்த செயலியை பற்றி விளக்கி கூறி, செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோருக்கு ஆசிரியராக இருந்து இந்த செயலியை பற்றி அறிவுறுத்த வேண்டும்.

கடந்த 2018–ம் ஆண்டு தமிழகத்தில் கவனக்குறைவாக ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது உள்ளிட்ட சம்பவங்களால் 2 ஆயிரத்து 572 பேர் இறந்தனர். இவர்களில் 600 பேர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. தண்டவாளத்தை கடக்கும்போது செல்போனில் பேசியபடி செல்வது, ‘ஹெட்போனில்’ பாட்டு கேட்டு செல்வது, ரெயிலில் இருந்து தவறி விழுந்தது போன்றவற்றால் இறப்பு ஏற்பட்டுள்ளது. இதை நாம் தவிர்க்க வேண்டும். இதற்காக ரெயில்வே போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுபோல் வீட்டை விட்டு வெளியேறி தவித்த 2 ஆயிரத்து 842 பேர் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ டிரைவர்கள் ஒவ்வொருவரும் காக்கி சட்டை அணிந்த போலீஸ்காரர்கள் தான். குற்ற சம்பவங்களை தடுப்பதில் அவர்களுக்கும் பங்கு உள்ளது. அசம்பாவித சம்பவங்கள், சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக டிரைவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் உமா, திருப்பூர் ரெயில் நிலைய மேலாளர் சுனில்தத், கோவை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ–மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Next Story