சின்னாண்டிபாளையம் குளம் அருகே குப்பை கிடங்கு அமைக்க தடை விதிக்க வேண்டும்; கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
சின்னாண்டிபாளையம் குளம் அருகே குப்பை கிடங்கு அமைக்க தடை விதிக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம், ஆண்டிபாளையம், குளத்துப்புதூர், சின்னாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் தெற்கு வட்டம் ஆண்டிபாளையம் கிராமத்தில் மங்கலத்தில் இருந்து திருப்பூர் ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு, சின்னாண்டிபாளையம் குளம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இந்த மயானம் இடம் போக மீதியுள்ள இடத்தில் கிழக்கு புறம் புதிய திருப்பூர் மேம்பாட்டு வளர்ச்சி கழகம் பவானி கூட்டு குடிநீர் (எல் அன்ட் டி) திட்டத்தின் மூலம் 10 லட்சம் லிட்டர் குடிநீர் நிலத்தடிதொட்டி 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலத்தடிதொட்டி மூலம் 10 கி.மீ. சுற்றளவுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதன் அருகே மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் மூலம் 20 லட்சம் லிட்டர் மேல் நிலைத்தொட்டியும், 2 லட்சம் நிலத்தடி தொட்டியும் தமிழ்நாடு கூட்டு குடிநீர் வாரியம் மூலம் பணி நடந்து வருகிறது. இவ்வாறாக இருக்கும் இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பை கிடங்கு, குப்பை மறு சுழற்சி மையம் அமைக்க முயற்சி எடுத்தது.
அப்போது விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கிடங்கு அமைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடத்தில் குப்பை கிடங்கு மற்றும் குப்பை மறுசுழற்சி மையம் அமைக்க கட்டிட பணி நடந்து வருகிறது. இங்கு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் அருகில் இருக்கும் சின்னாண்டிபாளையம் குளம் மாசுபடும். எனவே இங்கு குப்பை கிடங்கு அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.