மார்த்தாண்டத்தில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை


மார்த்தாண்டத்தில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 Jan 2019 3:45 AM IST (Updated: 8 Jan 2019 8:20 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழித்துறை,

மார்த்தாண்டம் பெத்தேல் தெருவில் வசித்து வருபவர் அம்பீதரன் (வயது 60). இவர் களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் அனுசியா (20). இவர், தோவாளையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

அம்பீதரன் தினமும் கடைக்கு செல்லும்போது உதவிக்கு மனைவியையும் அழைத்து செல்வது வழக்கம். அதேபோல் காலையில் அம்பீதரன் கடையை திறப்பதற்காக மனைவியை அழைத்து சென்றார். வீட்டில் அனுசியா மட்டும் தனியாக இருந்தார். இரவு 8 மணிக்கு மனைவியுடன் அம்பீதரன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் அனுசியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு இருவரும் அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனுசியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களியக்காவிளை, மேக்கோடு பகுதியில் அம்பீதரன் வசித்த போது, 2 ஆண்டுகளுக்கு முன் அவருடைய மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவேதான் அம்பீதரன் அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு குடும்பத்தை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மகனையும், மகளையும் இழந்து விட்டதால் அம்பீதரனும், அவருடைய மனைவியும் சோகத்தில் உள்ளனர்.

Next Story