மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் மீனவ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்


மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் மீனவ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Jan 2019 4:00 AM IST (Updated: 14 Jan 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கீழ்வேளூர்,

கீழ்வேளூரை அடுத்த கிள்ளுக்குடியில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி மீனவத் தொழிலாளர் சங்க நாகை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க நிர்வாகி சுப்பையன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் செல்வராஜ், மாநில துணை செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேந்திரன் வரவேற்றார். மீனவ தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சின்னத்தம்பி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

60 வயதான மீனவ தொழிலாளர்களுக்கு மீன்வளத்துறை மூலம் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அவசர கால நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மீனவர் நல வாரிய படிவங்களை பெற்று கொண்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை வழங்கப்படாமல் உள்ள மீனவ நல வாரிய அட்டையை உடனே வழங்க வேண்டும்.

மீன் தொழில் புரியும் அனைவரையும் மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் புயல் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர்கள் மகேந்திரன், கோபிநாதன், துணை தலைவர் இளங்கோவன், மீனவ தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story