பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி உடுமலை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர்களுக்கு செல்வதற்காக உடுமலை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.
உடுமலை,
பொங்கல் பண்டிகைக்காக பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சிலர் தங்களது உறவினர்களது வீடுகளுக்கு செல்கின்றனர். அத்துடன் சுற்றுலாவும் செல்கின்றனர்.
அவர்கள் குடும்பத்துடன் செல்கின்றனர். அதனால் பஸ்கள், ரெயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு உடுமலை வழித்தடத்தில் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் உள்ளது.
இந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 6.40 மணிக்கு வந்து செல்லும். இந்த ரெயிலில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு நேற்றுகாலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 500–க்கும் மேற்பட்ட பயணிகள் திரண்டிருந்தனர். அந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு வந்தபோதே ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் உடுமலை ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அந்த ரெயிலில் ஏறி கூட்ட நெரிசலில் நின்றபடி பயணம் செய்தனர். மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு பண்டிகை காலங்களில் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும், இதுபோன்ற விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்பதே ரெயில் பயணிகளின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.