மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்ற ராகுல்காந்தி காட்டும் பாதையில் அயராது பாடுபட வேண்டும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்ற ராகுல்காந்தி காட்டும் பாதையில் அயராது பாடுபட வேண்டும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 Jan 2019 4:45 AM IST (Updated: 15 Jan 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி காட்டும் பாதையில் அயராது பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை சன்வே ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் எம்.எல்.ஏ.க்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* பொய்யான பலவாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் அறிவித்து அரசியல் நாடகம் நடத்தி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செயலற்ற அரசாக உள்ளது என்பதை அனைவரும் அறிவர். மக்கள் விரோத இந்த அரசை அகற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி காட்டும் பாதையில் அயராது பாடுபட வேண்டும்.

* நாட்டுமக்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட சக்தி என்ற மாபெரும் மக்கள் இயக்கம் புதுவையில் வருகிற 20–ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

* வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தொகுதியில் உள்ள வட்டார, மாவட்ட தலைவர்கள் கலந்து ஆலோசனை நடத்தி பூத் ஏஜெண்டுகளை நியமித்து வருகின்ற 20–ந் தேதிக்குள் கட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

* நரேந்திர மோடி தலைமையிலான மதவாத மத்திய பா.ஜ.க. அரசின் அவலங்களை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கும் வகையில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் கட்சியின் வளர்ச்சிக்கு நம் பங்களிப்பை அளிக்க ஏதுவாக வீடுவீடாக சென்று நிதி திரட்ட வேண்டும்.

* அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்க வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்யவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story