சென்னையில் ரூ.7 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் 4 பேர் அதிரடி கைது; சொகுசு கார் பறிமுதல்


சென்னையில் ரூ.7 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் 4 பேர் அதிரடி கைது; சொகுசு கார் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Jan 2019 10:45 PM GMT (Updated: 16 Jan 2019 8:07 PM GMT)

சென்னையில் ரூ.7 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

பண்டிகை காலங்களில் தங்கத்தின் தேவைப்பாடு அதிகம் நிலவுகிறது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை மர்ம ஆசாமிகள் சிலர் கடத்தி கொண்டு வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொங்கல் பண்டிகை தினத்தன்று அதிகாலையில் வருவாய் புலனாய்வு பிரிவு சென்னை மண்டல அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி கொண்டு வந்ததாக கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.6 கோடியே 88 லட்சம் மதிப்புடைய 20.6 கிலோ வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.21 லட்சம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் கும்பல் தலைவன் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் உள்நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு ஆட்களை அனுப்பி, வெளிநாட்டில் இருந்து கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தை சென்னைக்கு கொண்டு வந்து, தன்னுடைய கூட்டாளிகளிடம் கொடுத்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், துபாய் நாட்டில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கும், இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடல் மார்க்கமாகவும் கடத்தி கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர்.

கடத்தல் கும்பலின் தலைவன், அவருடைய நெருங்கிய உறவினர் மற்றும் 2 கூட்டாளிகள் ஆகிய 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முறையான வரி செலுத்தி வாங்கப்படும், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக மர்ம ஆசாமிகள் கடத்தி கொண்டுவரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேற்கண்ட தகவல் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதன் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடப்பதால், தற்போது கைதானவர்களின் பெயர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story