ராமேசுவரம் மீனவர்களை கட்டி வைத்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் வலைகளை அறுத்து விரட்டி அடித்தனர்


ராமேசுவரம் மீனவர்களை கட்டி வைத்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் வலைகளை அறுத்து விரட்டி அடித்தனர்
x
தினத்தந்தி 21 Jan 2019 5:45 AM IST (Updated: 21 Jan 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியதுடன், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500–க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்து 500–க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக 5 குட்டி கப்பல்களில் 30–க்கும் மேற்பட்ட கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அப்போது தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்துக்கொண்டே அவர்களை நோக்கி வந்துள்ளனர். பின்னர் சில படகுகளில் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன், அதில் இருந்த மீன்கள், வலைகள் மற்றும் மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ரீகன் உள்பட 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அந்த படகிலேயே கட்டி வைத்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் 2 மணி நேரம் கழித்து விடுவித்து இனிமேல் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ரீகனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரிகளிடம் மீனவர்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இது வரையிலும் இல்லாத வகையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் மீனவர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story