கடலூரில் 26, 27–ந்தேதிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில மாநாடு திருமாவளவன், கமல்ஹாசன் பங்கேற்பு
கடலூரில், வருகிற 26,27–ந்தேதிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க 6–வது மாநில மாநாடு நடக்கிறது. இதில் திருமாவளவன், கமல்ஹாசன் பங்கேற்கிறார்கள்.
கடலூர்,
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
8–வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை 1.1.2016 முதல் வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக அனைத்து படிகள் மற்றும் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஊதியக்குழு முரண்பாடுகளை அனைத்து நிலை பணியாளர்களுக்கும் களைதல் வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க 6–வது மாநில மாநாடு கடலூரில் வருகிற 26–ந்தேதி (சனிக்கிழமை), 27–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
இதில் முதல் நாள் (26–ந்தேதி) டவுன்ஹாலில் நடக்கும் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் விருதை காந்தி தொடங்கி வைக்கிறார். இதில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.
2–வது நாள் (27–ந்தேதி) அரசியல் இயக்க அரங்கம் நடக்கிறது. இதில் தொ.மு.ச., ம.தி.மு.க., மாதர் சங்கம், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பிரதிநிதிகள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார். தொடர்ந்து மாலை 3 மணி அளவில் கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து பேரணி தொடங்கி, அரசு மருத்துவமனை சாலை வழியாக வந்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் நிறைவடைகிறது.
அங்கு மாலை 5 மணிக்கு பொது மாநாடு நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகிறார். மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.
பேட்டியின் போது மாநில துணை தலைவர் சரவணன், வரவேற்புக்குழு தலைவர் குப்புசாமி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராஜாமணி, துணை செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.