சத்தி இன்ஸ்பெக்டரின் டிரைவர் வீட்டில் சோதனை 3 மான் கொம்புகள்– மடிக்கணினி பறிமுதல் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சத்தி இன்ஸ்பெக்டரின் டிரைவர் வீட்டில் சோதனை 3 மான் கொம்புகள்– மடிக்கணினி பறிமுதல் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Jan 2019 4:45 AM IST (Updated: 30 Jan 2019 8:16 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டரின் டிரைவர் வீட்டில் இருந்து 3 மான் கொம்புகள் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரை விடுவிக்க கோரி வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பதி. இவர் வாகன தணிக்கையில் இருந்தபோது லஞ்சம் வாங்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள், கோபி சின்ன மொடச்சூர் திரு.வி.க. வீதியில் உள்ள பதி வீட்டில் சோதனை நடத்த காரில் சென்றனர்.

பின்னர் அவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பதி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த சோதனை மாலை வரை தொடர்ந்தது. ஆனால் ஆவணங்கள் எதையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை.

இதேபோல் பதியின் ஜீப் டிரைவராக இருந்த சத்தியமங்கலம் காலனியை சேர்ந்த மனோஜ் என்பவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது இன்ஸ்பெக்டர் பதி மனோஜ் வீட்டில் வைத்திருந்த மடிக்கணினி, அவருடைய அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த வீட்டில் 3 மான் கொம்புகளும் இருந்தன. அதனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து டிரைவர் மனோஜ் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 3 மான் கொம்புகளையும் அதிகாரிகள், சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் மாவட்ட வன அதிகாரி பெர்னாட், மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆனால் வனத்துறையினர் அவரை நேற்று வரை கைது செய்யாமலும், விடுவிக்காமலும் இருந்தனர்.

இந்த நிலையில் மனோஜின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகத்துக்கு நேற்று சென்றனர். பின்னர் பொதுமக்கள், மனோஜை விடுவிக்க வேண்டும் என்று கூறியதோடு, அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த வன அதிகாரி பெர்னாட் மற்றும் வனத்துறையினர், முற்றுகையிட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ‘மனோஜிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்தவுடன் அவர் விடுவிக்கப்படுவார்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மான்கொம்புகள் வைத்திருந்ததால் மனோஜுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தொகை செலுத்தியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.


Next Story