ஊருணிகளுக்கு செல்லும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் சிவகங்கை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஊருணிகளுக்கு செல்லும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் சிவகங்கை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Feb 2019 4:00 AM IST (Updated: 3 Feb 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் தஞ்சாக்கூரில் உள்ள 6 ஊருணிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும் என்று கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரையை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:–

சிவகங்கை மாவட்டம் தஞ்சாக்கூர் கிராமம் முற்றிலும் விவசாயத்தை தொழிலாக கொண்ட கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் ராணி ஊருணி, பட்டு ஊருணி, தோப்புக்கார ஊருணி, அடைக்காத்தான் ஊருணி, வண்ணான் ஊருணி, கண்ணாத்தாள் ஊருணி என 6 ஊருணிகள் இருந்தன. இந்த ஊருணிகளுக்கு வைகை ஆற்றில் இருந்து நீர்வரத்து கால்வாய் உள்ளது. இதனால் கிராமத்தில் விவசாயம் செழிப்பாக இருந்தது. மேலும் இங்கு 20 அடியில் நிலத்தடி நீர் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆற்றில் 2 முறை தண்ணீர் வந்தும், தஞ்சாக்கூர் கிராம ஊருணிகளுக்கு நீர்வரத்து இல்லை. ஊருணிகளுக்கு வரும் அனைத்து கால்வாய் தூர்வாரப்படாதது மற்றும் ஆக்கிரமிப்புகள் தான் தண்ணீர் வரத்து இல்லாமல் போனதுக்கு காரணம். நீர்வரத்து இன்றி தற்போது ஊருணிகள் வறண்டு கிடக்கின்றன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீர்வரத்து கால்வாய்களை தூர்வார உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், சிவகங்கை தஞ்சாக்கூர் கிராமத்தில் உள்ள ராணி ஊருணி, பட்டு ஊருணி உள்பட 6 ஊருணிகளுக்கு வைகை ஆற்று தண்ணீர் செல்லும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும். மேலும் அந்த கால்வாய்களில் வைகை ஆற்று தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story