கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு


கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு
x
தினத்தந்தி 4 Feb 2019 11:30 PM GMT (Updated: 4 Feb 2019 8:59 PM GMT)

கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், கோவை, புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கொடுத்திருந்த மனுக்களில் கூறியிருந்ததாவது:–

ஈரோட்டில் உள்ள முல்லை குழும நிறுவனத்தில் முதலீடு செய்தால் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை லாபத்தொகையை திருப்பி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை நம்பி நாங்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளோம். பணத்தை செலுத்தியதற்கான பத்திரம் எங்களிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து லாபத்தில் பங்கு கொடுப்பதாக ஒருசில மாதங்கள் மட்டுமே நிறுவனத்தினர் பணத்தை கொடுத்தனர். அதன்பின்னர் எங்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை. எனவே ஈரோடு, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள முல்லை குழும நிறுவனங்களில் சென்று பார்த்தோம். அங்கு பணியாற்றியவர்கள் ராஜினாமா செய்துவிட்டு சென்றதும், உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதும் தெரியவந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் அவர்கள் கூறிஇருந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘‘முல்லை குழும நிறுவனம் சார்பில் கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதில் இயற்கை விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் எண்ணெய் தயாரிப்பு போன்ற தொழில் செய்து வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் 6 மாதங்களில் ரூ.13 லட்சத்து 500 தருவதாக அறிவிக்கப்பட்டது. அதை நம்பி ஏராளமானவர்கள் முதலீடு செய்தனர். இதனால் கோடிக்கணக்கான ரூபாயை அந்த நிறுவனத்தினர் மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்றனர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘‘எழுமாத்தூரில் இருந்து சோளங்கபாளையம் செல்லும் சாலையோரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் உள்ள பாரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்றனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 239 மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி, ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story