காரைக்குடி அருகே கத்தை, கத்தையாக கள்ள நோட்டுகள் பறிமுதல் பெண் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
காரைக்குடியில் கள்ள நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கியுள்ளன.
காரைக்குடி,
காரைக்குடி இடையர் தெருவைச் சேர்ந்தவர் முரளி (வயது 29). இவரிடம் கள்ள நோட்டுகள் புழக்கம் உள்ளதாக காரைக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து காரைக்குடி நகராட்சி பூங்கா அருகே நின்று கொண்டிருந்த முரளியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவரிடம் சில 100 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த கள்ள நோட்டுகளை சூலாமணிபுரத்தைச் சேர்ந்த சேதுபதி (28) என்பவர் கொடுத்ததாக கூறினார்.
சேதுபதியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குன்றக்குடி அருகே உள்ள துலாவூர் பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (32) என்பவர் தனக்கு கள்ள நோட்டுகளை கொடுத்ததாக கூறினார். இதனையடுத்து சிவரஞ்சனியின் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ரூ.95 ஆயிரம் கள்ள நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின.
இது குறித்து போலீசார் முரளி, சேதுபதி, சிவரஞ்சனி மற்றும் இதில் தொடர்புடைய சின்னையா என்பவரையும் பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.