காங்கேயம் அருகே தொட்டிக்கரி தொழிற்சாலை தொடங்கும் பணியை நிறுத்தவேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


காங்கேயம் அருகே தொட்டிக்கரி தொழிற்சாலை தொடங்கும் பணியை நிறுத்தவேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 10:14 PM GMT)

காங்கேயம் அருகே தொட்டிக்கரி தொழிற்சாலை தொடங்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வந்திருந்த காங்கேயம் அருகே வடசின்னாரிபாளையம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

காங்கேயம் கல்லாங்காட்டுபுதூரில் தொட்டிக்கரி சுடும் தொழிற்சாலை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் சுற்றியுள்ள பகுதிகளின் ஆழ்குழாய் மற்றும் கிணற்றுநீர் மாசுப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கல்லாங்கட்டுப்புதூர், கடலைகாட்டுப்புத்தூர், ராஜீவ்நகர், நாடார்தெரு, காடையூர், காங்கேயம்பாளையம், காட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கரித்தொட்டி ஆலை தொடங்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

காங்கேயம் தாயம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2017–2018–ம் கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக்கல்வி முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு அங்கன்வாடி இல்லாத நிலையில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிப்பிற்காக அரசு பள்ளியில் சேர்க்க தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவர் கொடுத்த மனுவில், உடுமலை வட்டம் சங்கராமநல்லூர் கிராமத்தில் இருந்த சொத்துக்களை ஒருசிலர், கடந்த 2007–ம் ஆண்டு சார்பதிவாளராக பணியாற்றிய சுசீலா என்பவருடன் இணைந்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. இதனால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மோசடி ஆவணங்களை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story