மதுவுடன் சேர்த்துக்கொள்ள கொய்யாப்பழம் கேட்டதால் தகராறு: டாஸ்மாக் ‘பார்’ மோதலில் வாலிபர் கொல்லப்பட்டது எப்படி? விசாரணையில் பரபரப்பு தகவல்; சட்டக்கல்லூரி மாணவர் கைது
மதுவுடன் சேர்த்துக்கொள்ள கொய்யாப்பழம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
புதூர்,
மதுரை சர்வேயர் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். அவருடைய மகன் சிவா (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் மது குடிப்பதற்காக மாட்டுத்தாவணி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது குடித்து கொண்டிருந்தபோது பார் ஊழியர் ஒருவரிடம் சிவா, மதுவுடன் சேர்த்துக்கொள்ள கொய்யாப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது கொய்யாப்பழம் இல்லை என்று ஊழியர் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த ஊழியருக்கும், சிவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் பார் ஊழியர்கள் சேர்ந்து சிவாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதற்கு சிவாவும், கார்த்திக்கும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது பார் ஊழியர்களுக்கும், சிவாவுக்கும் வாக்குவாதம் முற்றி மோதலானது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் பார் ஊழியர்கள், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சிவாவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டதாகவும் தெரியவருகிறது.
இதில் பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்துபோனார். உடன் வந்த நண்பர் கார்த்திக் மீதும் கத்தியால் வெட்டு விழுந்தது. அவர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தப்பி ஓடிய கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறி சிவாவின் உறவினர்கள் மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் அமர்ந்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட வாலிபரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து சிவாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவரான இருதயராஜா (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.