சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் கட்டிட தொழிலாளி கைது


சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 14 Feb 2019 10:15 PM GMT (Updated: 14 Feb 2019 8:34 PM GMT)

சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் இரும்பாலை அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவர் கருங்கல்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமான வேலை செய்தார். வேலை செய்யும் இடத்தின் அருகே 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி வீட்டில் இருந்து வெளியே வந்தார். ரமேஷ் வேலைக்கு வரும்போது அந்த சிறுமியை பார்த்தார். பின்னர் அவர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தினார்.

இதையடுத்து ரமேஷ் வேலைக்கு வரும்போதெல்லாம் அந்த சிறுமியை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சு நாளுக்குநாள் அவர்களுக்கிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தியது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த சிறுமியின் வீட்டுக்கு ரமேஷ் சென்று அங்கு யாரும் இல்லாத போது, அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இவர்களின் பழக்கம் கடந்த 7 மாதமாக தொடர்ந்து வந்தது. இதையறிந்த பெற்றோர் சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டு, அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறும் கண்டித்தனர்.

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி இரவு ரமேஷ், சிறுமியிடம் வீட்டில் எல்லோரும் தூங்கிய பின்பு அதிகாலையில் வெளியே வந்துவிடுமாறும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். 8-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு ரமேஷ் சிறுமியின் வீட்டின் அருகே வந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தூக்கத்தில் இருந்து எழுந்து சிறுமி கழிவறைக்கு செல்வதுபோல் கதவை திறந்து வீட்டை விட்டு வெளியே வந்தாள். அங்கிருந்து அவர்கள் 2 பேரும் நடந்து கொண்டலாம்பட்டிக்கு சென்றனர். பஸ்சில் ரமேஷ் சிறுமியை சித்தர் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சேலம் புதிய பஸ்நிலையம் வந்து அங்கிருந்து அவர்கள் கேரளாவில் உள்ள ரமேஷின் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனிடையே அதிகாலை 4 மணிக்கு பெற்றோர் விழித்து பார்த்தபோது சிறுமி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியை அவர்கள் அக்கம், பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சிறுமி பெற்றோருக்கு போன் செய்து நீங்கள் என்னை தேட வேண்டாம் எனவும், தான் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அப்போது சிறுமியிடம் பெற்றோர் நைசாக பேசி வீட்டுக்கு வருமாறு தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் வீட்டுக்கு வந்தனர். நேற்று முன் தினம் சிறுமியை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ரமேஷ் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரமேஷ் மீது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தல், இளம்வயது திருமணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ரமேசை போலீசார் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story