ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஆப்பக்கூடல் பேரூராட்சியில் அம்பேத்கர் ஆடவர் சுய உதவிக்குழுவில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றும் 10–க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
நாங்கள் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே மாத ஊதியமாக கொடுத்தனர்.
ஆனால் கடந்த 2014–ம் ஆண்டு முதல் எங்களது சம்பளம் வங்கி காசோலையாக பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்த சம்பள பணம் கையாடல் செய்யப்பட்டு எங்களுக்கு ஊதியம் குறைவாக கொடுத்து வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஆடவர் சுய உதவிக்குழுவில் ரூ.14 லட்சத்து 33 ஆயிரத்து 440 கையாடல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில் 2 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஆடவர் சுய உதவிக்குழு முன்னாள் ஊக்குனர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளனர். எங்களிடம் கையாடல் செய்த பணத்தை எங்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.