நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது கடற்படையினர் நடவடிக்கை


நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது கடற்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 7:06 PM GMT)

நாகை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, பூம்புகார், வாணகி, பழையாறு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை பயன்படுத்தி கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பது, கொடூரமாக தாக்கி மீன்கள் மற்றும் மீன்பிடி கருவிகளை பறித்து செல்வது போன்றவை அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வந்த நிலையில் தற்போது நாகை அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 51 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் நேற்று இந்திய கடல் எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் 5 படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இந்த மீனவர்களை கண்ட கடற் படையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களது படகுகளை நெருங்கினர். இதனால் பதற்றமடைந்த மீனவர்கள் படகுகளை வேகமாக செலுத்த தொடங்கினர். ஆனால் இந்திய கடற்படையினர் தங்களது ரோந்து கப்பல் மூலம் சம்பந்தப்பட்ட படகுகளை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் படகுகளில் ஏறி அதில் இருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், இலங்கை மீனவர்கள் என்றும் எல்லை தாண்டி வந்து நாகை கடற்பகுதியில் மீன்பிடித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கடற்படையினர் அந்த படகுகளில் இருந்த 25 இலங்கை மீனவர்களையும் கைது செய்து அவர்களது படகுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இந்திய கடற்படையினர் காரைக்காலுக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் கடற்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story