நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது


நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2019 11:30 PM GMT (Updated: 18 Feb 2019 10:21 PM GMT)

நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல், பழனிச்சாமி. இருவரும் சேர்ந்து கோவையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கருணாநிதி ஆகியோருக்கு சொந்தமான, கோபியில் இருக்கும் 1¾ செண்ட் விவசாய நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டார்கள். அப்போது நிலம் வேறு ஒருவருடைய பெயரிலும், பத்திரத்தில் உள்ளதுபோல் இல்லாமல் நிலத்தின் அளவு குறைவாகவும் இருந்தது.

இதனால் நிலத்தை அளவீடு செய்து, பெயர் மாற்றிக்கொடுக்க ராதாகிருஷ்ணன் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கான வேலைகளை சக்திவேல் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் கோபியை சேர்ந்த ரங்கசாமி என்பவர் சக்திவேலிடம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நிலத்தை அளவீடு செய்து பெயர் மாற்றி தருவதாக கூறியதாக தெரிகிறது. அதற்கு சக்திவேல் ரூ.75 ஆயிரம் தர முடியாது வேண்டுமானால் ரூ.65 ஆயிரம் தருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ரங்கசாமி சம்மதித்துள்ளார்.

ஆனால் சக்திவேல் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதுபற்றி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரங்கசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தார்கள்.

இதற்காக ரசாயனம் தடவிய 65 ஆயிரம் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை சக்திவேலிடம் கொடுத்து ரங்கசாமியிடம் கொடுக்க சொன்னார்கள்.

அதன்படி நேற்று மாலை 3.30 மணி அளவில் சக்திவேல் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்று, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரங்கசாமியிடம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீரென நுழைந்து ரங்கசாமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் கொடுக்கப்பட்ட லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தார்கள்.

அதன்பின்னர் அலுவலகத்தின் கதவுகள், ஜன்னல்களை சாத்திவிட்டு மாலை 6 மணி வரை ரங்கசாமியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பிறகு அவரை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு ஜீப்பில் அழைத்து சென்றார்கள். இந்த சம்பவம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story