இருவேறு விபத்து: நெடுஞ்சாலை துறை அதிகாரி உள்பட 2 பேர் பலி
மேலூர் மற்றும் மதுரையில் நடந்த இருவேறு விபத்துகளில் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
மேலூர்,
மதுரையை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் வைரப்பன் (வயது 61). இவரும், அவரது நண்பர்களான ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர் விஜயகுமார், சண்முகசுந்தரம் ஆகியோருடன் காரில் திருச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதுரை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
மேலூர் அருகே நரசிங்கம்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் வைரப்பன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த விஜயகுமார், சண்முகசுந்தரம் ஆகியோர் படுகாயத்துடன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியை சேர்ந்தவர் பாபு (42). இவர் மதுரை மேலமாசிவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுந்தரியும் (38) அதே கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பழங்காநத்தம் பகுதியில் அவர்கள் சென்றபோது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது அமீர்ஜான் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கணவன்–மனைவி 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் பாபு மற்றும் அவரது மனைவி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தம்பதி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாபு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் இமானுவேல்(28), மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அமீர்ஜான்(31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.