வருகிற 22–ந்தேதிக்குள் “ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்புங்கள்” தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு


வருகிற 22–ந்தேதிக்குள் “ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்புங்கள்” தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்காக வருகிற 22–ந்தேதிக்குள் அமெரிக்காவுக்கு அனுப்புமாறு தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி சிவகளை பரம்பு பகுதியிலும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் தொடர்பான வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது தொல்லியல் துறை சார்பில் மூத்த கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆஜரானார்கள். மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, ‘‘ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யும் பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக ரூ.4 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நிதியின் மூலம் உரிய பணிகள் நடந்துள்ளன. தமிழர் நாகரிக ஆய்வில் எந்தவித சுணக்கத்தையும் மத்திய அரசு ஏற்படுத்தவில்லை’’ என வாதாடினார்.

பின்னர் மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் அழகுமணி, ‘‘ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கைகள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இவ்வளவு காலம் தாழ்த்துவதற்கு காரணம் என்ன? நாங்கள் எந்த மொழிக்கும், எந்த கட்சிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் பழமையை வெளிக்கொண்டு வர ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதை தான் வலியுறுத்துகிறோம்.

எனவே 2003–ம் ஆண்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை 2 பிரிவுகளாக பிரித்து, கார்பன் பரிசோதனைக்காக வருகிற 22–ந்தேதிக்குள் மும்பை பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் தமிழகத்தில் எத்தனை இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடக்கிறது? அதில் எத்தனை ஆய்வுகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன? அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டவற்றில் எத்தனை பொருட்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன?

ஒவ்வொரு மாநிலத்திலும் பழமையான இடங்கள், நினைவுச்சின்னங்கள் எத்தனை என வகைப்படுத்தப்பட்டுள்ளதா? மாநில வாரியாக விவரம் தாக்கல் செய்ய வேண்டும். அகழாய்வு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது?

கடந்த 5 ஆண்டுகளில் மாநில வாரியாக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எவ்வளவு? தமிழக தொல்லியல் துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என பதில் அளிக்க தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தொல்லியல் ஆய்வு நடத்த ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆர்வத்துடன் இருந்தும், அவருக்கு உரிய ஒத்துழைப்பை தொல்லியல் துறையினர் வழங்கவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்க தொல்லியல் துறை அதிகாரி சத்தியபாமா, சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் வருகிற 25–ந்தேதேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story