வில்லியனூரில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்


வில்லியனூரில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:21 PM GMT (Updated: 18 Feb 2019 11:21 PM GMT)

கவர்னர் கிரண்பெடியை கண்டித்து வில்லியனூரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

வில்லியனூர்,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகள், மதசார்பற்ற கட்சியை சேர்ந்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கவர்னர் மாளிகை முன்பு 39 மக்கள் பிரச்சினை கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 6 நாட்களாக விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் காங்கிரஸ்-தோழமை கட்சிகளின் ஆலோசனைப்படி அடுத்தடுத்து நாள் தோறும் ஒவ்வொரு போராட்டமாக நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த சனிக்கிழமை 12 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதையடுத்து நேற்று முன்தினம் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடந்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து எதிரில் காங்கிரஸ் கட்சி மங்கலம் தொகுதி சார்பில் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு தலைமை தாங்கி பேசியதாவது;-

புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எங்களால் நிறைவேற்ற முடியாமல் கவர்னர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு தடுத்து வருகிறார். அவர் கனவு ஒரு போதும் பலிக்காது. மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். கவர்னருக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து பல்வேறு கட்டமாக நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யூப், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர்கள் கண்ணபிரான், செந்தில்குமார், சம்பத், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மற்றும் ரகுபதி, ரமேஷ் உட்பட மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story