திருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி


திருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 20 Feb 2019 4:35 AM IST (Updated: 20 Feb 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி கோவிலைப் போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? என்று அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 38 ஆயிரத்து 615 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகளை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். அந்த கோவில்களுக்கு சொந்தமான கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்துள்ளனர். இதனால் கோவில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறு புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோவில் நிலங்களையும், சொத்துகளையும் பாதுகாப்பது குறித்தும், ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்பதற்கு மாவட்ட அளவில் குழு அமைக்கவும், குறைந்த வாடகை செலுத்தி கோவில்களுக்கு சொந்தமான கடைகளை நடத்தி வருபவர்களை கண்டறிந்து வெளியேற்றவும், கோவில்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.

கோவிலுக்கு சொந்தமான இடங்கள், பூஜை கட்டண விவரங்களை அந்தந்த கோவிலின் முன்பு பக்தர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பட்டியலிடவும், கோவில் பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் அனைத்தையும் இணைய தளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள தங்கும் விடுதிகளில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதைப்போல பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களின் விடுதிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், ஏன் செய்யவில்லை?.

திருப்பதியில் கோவில் தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல், தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை?

ராமேசுவரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்) உள்ளனவா? அந்த கோவில்களில் அடிப்படை வசதிகள் ஏன் மேற்கொள்ளவில்லை? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

முடிவில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story