தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி


தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2019 3:30 AM IST (Updated: 21 Feb 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அவருக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. (தெற்கு), கீதாஜீவன் எம்.எல்.ஏ. (வடக்கு) மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை அதிகமாக விமர்சித்தது பா.ம.க.தான். இப்படி ஒரு கேடு கெட்ட ஆட்சி இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் அடிக்கடி கூறினார். ஆனால் தற்போது அவரே, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து உள்ளார். இதற்கு என்ன விளக்கம், என்ன பதில் என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. கூட்டணியில் இடம் பெறும் மற்ற கட்சிகளுடன் மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்து அறிவிப்பார். கூட்டணி தொடர்பாக தி.மு.க.வில் எந்தவித குழப்பமும் இல்லை. அ.தி.மு.க.தான் குழப்பத்தில் உள்ளது. எத்தனை கட்சிகளை கூட்டணி சேர்க்க முடியுமோ, அத்தனை கட்சிகளை சேர்த்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் இருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போது வந்து உள்ள தீர்ப்பின் பின்னணி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையிலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு விரும்பி இருந்தால், மக்கள் போராடிக் கொண்டு இருந்த போதே தீர்த்து வைத்து இருக்கலாம். அப்போது எங்கே போனார்கள். மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இத்தனை உயிர்களை பறித்து உள்ளார்கள். அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story