கப்பல் விபத்தில் சிக்கி மாயமான 4 பேரை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அதிகாரிகள் ஆஜராக நேரிடும் மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
கப்பல் விபத்தில் சிக்கி மாயமான 4 பேரை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியதுடன், உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, அவினாஷ் உள்பட 4 பேர் இந்தியாவில் இருந்து ரஷியாவிற்கு தனியார் கப்பல் மூலம் எரிவாயு ஏற்றி சென்றனர். கடந்த மாதம் 21–ந்தேதி ரஷியா அருகே அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பினர்.
அதில் பிரிட்டோ, அவினாஷ் உள்பட இந்தியர்கள் 4 பேரின் நிலை என்ன ஆனது? என தெரியவில்லை. அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,“ கியாஸ் ஏற்றிச் சென்ற கப்பல் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியுள்ளது. அந்த கப்பலில் 8 இந்தியர்களும், மற்றொரு கப்பலில் 8 இந்தியர்களும் இருந்துள்ளனர். அதில் 4 இந்தியர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேரை காணவில்லை. அவர்களைத்தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை, ரஷிய வெளியுறவுத்துறையோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பணிகள் குறித்து கேட்டு வருகிறது என்று கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக கடலோர காவல்துறை அதிகாரிகள் 2 பேர் ஐகோர்ட்டில் நேற்று நேரில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தான் உரிய பதில் அளிக்க முடியும். ஆனால் கடலோர காவல் அதிகாரிகள் ஆஜராகி இருக்க தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், கப்பல் விபத்தில் மாயமான இந்தியர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 25–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.