கோடைகாலத்தில் தடையின்றி மின்வினியோகம் செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி


கோடைகாலத்தில் தடையின்றி மின்வினியோகம் செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 26 Feb 2019 4:00 AM IST (Updated: 26 Feb 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

கோடை காலத்தில் தடையின்றி மின் வினியோகம் செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

சென்னையை சேர்ந்தவரும், மக்கள் பணியில் மக்கள் சங்கம் என்ற சங்கத்தின் பொருளாளருமான தேசிகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கஜா புயல் பாதித்த பல கிராமங்களில் இன்னும் மின் வினியோகம் சீரடையவில்லை. இதனால் அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். இயற்கை பேரிடர் காலங்களில் மின்சாரம் தடையின்றி கிடைத்தால் விரைவில் அதில் இருந்து மீள முடியும். எதிர்காலத்தில் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் மின் வினியோக பாதிப்பு, மின் துண்டிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க பூமிக்கு அடியில் மின்கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பூமிக்கு அடியில் மின்கம்பிகளை கொண்டு செல்வது எளிமையானது. பராமரிப்புக்காக அதிகம் செலவிட தேவையில்லை. காற்று மற்றும் விபத்தின்போது மின் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும். மின் திருட்டு குறையும். பிராணிகள், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. மின் கம்பங்களை நட்டு உயரமாக மின் கம்பிகளை கொண்டு சென்று மின் வினியோகம் செய்வதை காட்டிலும் பூமிக்கு அடியில் மின்கம்பிகளை கொண்டு செல்வது பொதுமக்கள், விலங்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.

இதுதொடர்பாக மின்வாரியத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கடலோர பகுதி உள்பட தமிழகம் முழுவதும் பூமிக்கு அடியில் மின்கம்பிகளை கொண்டு சென்று மின் வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில், குறிப்பாக இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் பூமிக்கு அடியில் மின் கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியத்திடம் போதுமான நிதி உள்ளதா?

கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? காற்றாலை மின்சாரம் தனியாருக்கு விற்கப்படுகிறதா?

தமிழகத்தின் மின் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறதா? அப்படி வாங்கப்பட்டால் மின்சாரத்துக்கான கட்டணம் எவ்வளவு? சூரிய ஒளி மூலம் எவ்வளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது? அந்த மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? தனியாருக்கு எவ்வளவு வழங்கப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக மின்வாரியத்தலைவர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 18–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story