எல்லீஸ்நகரில் சாலை நடைபாதையை கடைகளால் ஆக்கிரமிக்கக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை எல்லீஸ்நகரில் சாலை நடைபாதையில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சென்னை திருத்தொண்டர் சபையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத சாலைகளை அளிப்பதன் நோக்கமாக பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை எல்லீஸ் நகர் பஸ் நிறுத்தம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் நடைபாதையை ஆக்கிரத்து கடைகளை கட்டி வருவதுடன், வாகனங்களையும் சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எல்லீஸ் நகர் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள நடைபாதை ஆக்கிரப்புகளை அகற்றக்கோரி கடந்த 11–ந்தேதி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எல்லீஸ்நகர் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள நடைபாதையில் கடைகள் அமைக்க இடைக்கால தடை விதித்தும், இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 19–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.