காங்கேயம் அருகே வேஸ்ட் பனியன் ஆலையில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
காங்கேயம் அருகே வேஸ்ட் பனியன் துணிகளை அரைத்து பஞ்சாக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
காங்கேயம்,
கேரளாவை சேர்ந்தவர் ஹைதர் அலி (வயது 65). இவருக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள மரவாபாளையம் கிராமத்தில் ஏ.டி.எஸ். டிரேடர்ஸ் என்ற பெயரில் சொந்தமாக ஆலை உள்ளது. இந்த ஆலையில் வேஸ்ட் பனியன் துணிகளை எந்திரம் மூலம் பஞ்சாக தயாரித்து பின்னர் அதை நூலாக்கி பல்வேறு நூற்பாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலையில் 50–க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த ஆலையில் வழக்கம்போல நேற்று வேலை நடந்து கொண்டிருந்த போது மதியம் 2 மணியளவில் எதிர்பாராத விதமாக ஆலையின் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வேஸ்ட் பனியன் துணி பண்டல்களில் தீப்பிடித்தது. பின்னர் அது மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென அனைத்து பனியன் துணி பண்டல்களுக்கும் பரவியது.
இதைத்தொடர்ந்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போதுமானதாக இல்லை. இதனால் வெள்ளகோவில் மற்றும் சென்னிமலை பகுதியை சேர்ந்த தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். ஆனால் சுமார் 4 மணி நேரம் போராடி மாலை 6 மணிக்கு பிறகே தீயை முற்றிலுமாக அணைக்க முடிந்தது.
ஆனாலும் ஆலையில் இருந்த வேஸ்ட் பனியன் மற்றும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு பண்டல்கள் மற்றும் பஞ்சு அரைக்கும் எந்திரம் என சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக சொல்லப்படுகிறது. இந்த பயங்கர தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து காரணமாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தீவிபத்து நடந்த போது ஆலையின் உரிமையாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.