ரெயில்வேயில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்தவர் கைது
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:–
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 59). இவர் தான் அகில இந்திய ரெயில்வே சேப்டி கவுன்சில் அமைப்பின் தலைவராக இருப்பதாகவும், தான் நடத்தும் பயிற்சி மையத்தில் சேர்ந்தால் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி தமிழகத்தில், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து வந்தார்.
அதேபோல் ஈரோடு காந்திஜி ரோட்டை சேர்ந்த முருகேசன் என்பவரிடமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலியான ஆவணங்கள் தயாரித்து அதை நம்ப வைத்து ஆள் மாறாட்டம் செய்து, ரூ.48 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இதுபற்றி முருகேசன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் கொடுத்தார். அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பத்மநாபனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று பத்மநாபனை நேற்று கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட பத்மநாபன் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.