உடுமலை அருகே சிறுகுறு விவசாயிக்கான சான்றிதழ் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
சிறுகுறு விவசாயிக்கான சான்றிதழ் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிமங்கலம்,
கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 32). இவர் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் தங்கி இருந்து வடுகபாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி திருமலைச்சாமி (57) என்பவர் அணுகி, தனக்கு சொந்தமாக வடுகபாளையம் பகுதியில் 4.82 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்திற்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிக்கான அரசு வழங்கும் மானியத்தொகையை பெறுவது எப்படி? என விவரம் கேட்டுள்ளார். அப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் கடந்த மாதம் 8–ந் தேதி ஆன்லைன் மூலம் திருமலைச்சாமி விண்ணப்பித்தார்.
இதையடுத்து கடந்த 26–ந் தேதி, சான்று பெறுவதற்காக வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலத்திற்கு திருமலைச்சாமி சென்றார். அப்போது சான்று வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.2,500 லஞ்சமாக தர வேண்டும் என்று கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார், விவசாயி திருமலைச்சாமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் லஞ்சப்பணத்தை தனது மருமகனான லிங்கப்பநாயக்கனூரை சேர்ந்த என்ஜினீயர் செல்வராஜ் மூலம் கொடுத்து அனுப்புவதாக திருமலைச்சாமி கூறினார். ஆனால் திருமலைச்சாமிக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யுமாறு செல்வராஜிடம் கூறினார். இதையடுத்து செல்வராஜ், திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று காலை செல்வராஜிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அதை ஆனந்தகுமாரிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்படி ரசாயன பொடி தடவிய அந்த ரூபாய் நோட்டுகளுடன், வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு செல்வராஜ் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தகுமாரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.2,500–ஐ செல்வராஜ் கொடுத்தார். அதை ஆனந்தகுமார் வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசந்திரன், இன்ஸ்பெக்டர் கவுசல்யா ஆகியோர் கையும் களவுமாக ஆனந்தகுமாரை பிடித்தனர்.
பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்திலுள்ள ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ஆய்வுக்குப்பிறகு கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தகுமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இருந்து கணினி மற்றும் ஆவணங்களையும் எடுத்து சென்றனர். இதற்கிடையில் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தும் விபரம் தெரிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.