காசிமேட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு


காசிமேட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 6 March 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

காசிமேடு பகுதியில் எண்ணூர் விரைவு சாலை, சென்னை துறைமுகம் இணைப்பு சாலை திட்டம் நிறைவு பெறுவதற்கு மீன்பிடி துறைமுகம் அருகே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக கடந்த 7 வருடங்களாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இதில் முடிவு எட்டப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த வாரம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் கொடுத்து நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. ஆனால் கால அவகாசம் நிறைவடைந்தும் பலர் கடைகளை அகற்றவில்லை.

இதனையடுத்து சென்னை துறைமுக அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக நேற்று காலை வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே மேம்பாலம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள திட்ட அளவில் மட்டுமே கட்ட வேண்டும் என்றும், தற்போது கூடுதலாக இடம் கேட்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து துறைமுக அதிகாரிகளுடன் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே குறித்த இடத்தில் பணிகளை தொடங்குவதற்கு இடம் வழங்க மீனவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பின்னர் வருவாய்த்துறையினர் இடங்களை அளந்து கொடுத்தனர். இதனையடுத்து மீனவர்கள் தாங்களாகவே முன்வந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்தி கொள்வதாக உறுதி அளித்தனர் இதனையடுத்து அதிகாரிகள் கலைந்து சென்றனர்.

Next Story