பல்லடம் தொழிலதிபரின் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3–வது நாளாக சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பல்லடத்தை சேர்ந்த தொழிலதிபரின் பங்களா, மில் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 3–வது நாளாக சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கணேஷ்வர். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான பஞ்சு மில் பல்லடம்–பொள்ளாச்சி சாலையில் உள்ளது. மேலும் இவருடைய பங்களா வீடும், அலுவலகமும் மில் அருகே அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 6–ந் தேதி காலையில் 10 கார்களில் 25–க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பல்லடத்தில் உள்ள கணேஷ்வர் பங்களாவுக்கு சென்றனர். அப்போது அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் சென்றனர். பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, கணேஷ்வரின் பங்களா, மில் மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். முதலில் அங்குள்ள கணினியில் பதிவாகி உள்ள தகவல்களை சேகரித்தனர். அந்த சோதனை அன்று இரவு வரை நடந்தது. அதே போல் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினமும் காலை முதல் மாலை வரை சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் 3–வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது அலுவலகத்திற்குள் யாரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதிக்க வில்லை. காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
பல்லடம் தொழில் அதிபர் வீடு, அலுவலகம் மற்றும் மில்களில் தொடர்ந்து 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.