சென்னை விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் தங்கம்–ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் தங்கம்–ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2019 4:15 AM IST (Updated: 11 March 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.48 லட்சம் தங்கம் மற்றும் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில், சுற்றுலா விசாவில் கொழும்பு சென்றுவிட்டு ஆந்திராவைச் சேர்ந்த 4 வாலிபர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களை சோதனை செய்தனர்.

ஆனால் 4 பேரிடம் இருந்த உடைமைகளில் எதுவும் இல்லை. இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று தனித்தனியாக சோதனை செய்தனர். அதில் 4 பேரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்கள் 4 பேரிடம் இருந்தும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அவரிடம் இருந்த சூட்கேசில் இஸ்திரி பெட்டி இருந்தது.

சந்தேகத்தின்பேரில் அதை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தகடுகள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் நடந்த சோதனையில் 5 பேரிடம் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 440 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் விமானத்தில் செல்வதற்காக வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது துபாய் செல்வதற்காக சுங்க சோதனை பகுதிக்கு வந்த சென்னையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவரது உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனால் அவர் அணிந்து இருந்த செருப்பு சற்று வித்தியாசமாக இருந்ததால் அதை பிரித்து பார்த்தனர். அதில் செருப்பின் மேல் பகுதியை கிழித்து அதன் உள்ளே அமெரிக்க டாலர் மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பணத்தை யாருக்காக துபாய் கடத்த முயன்றார்?, அது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story