பா.ஜ.க. நெருக்கடியால் தான் “அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்துள்ளது என்று கூறுவது சரியல்ல” இல.கணேசன் பேட்டி


பா.ஜ.க. நெருக்கடியால் தான் “அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்துள்ளது என்று கூறுவது சரியல்ல” இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 4:45 AM IST (Updated: 11 March 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. நெருக்கடியால் தான் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்துள்ளது என்று கூறுவது சரியல்ல என இல.கணேசன் கூறினார்.

மதுரை,

பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத்அசார் யாருடைய ஆட்சியின்போது விடுதலை செய்யப்பட்டார் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தினர். அந்த விமானத்தில் இருந்த இந்திய பயணிகளை விடுவிக்க வேண்டும் என்றால் இந்திய சிறையில் இருக்கும் மசூத்அசாரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பயங்கரவாதிகள் முன்வைத்தனர்.

ஆனால் பயணிகளின் உறவினர்கள் அனைவரும், எங்களது பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். அதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதியை விடுவிக்கக்கூடாது என்றனர். ஆனால் அவர்களை ஒன்று சேர்த்து பிரதமர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தூண்டியது காங்கிரஸ் கட்சி தான். அதன்காரணமாக மசூத்அசாரை விடுதலை செய்ய நேரிட்டது. இந்திய சிறையில் இருந்து மசூத்அசாரை விடுவித்ததற்கு காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம்.

நான் ராகுல்காந்தியிடம் கேட்கிறேன், மும்பை, கோவை நகரங்களில் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் யார் ஆட்சியில் நடந்தது. தமிழகத்தில் ஓடும் ரெயில்களுக்கு தேஜஸ், அந்தியோதயா என இந்தியில் பெயர் வைக்கலாமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மொழிப்பிரச்சினையை தூண்டும் வகையில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்த கட்சியின் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் தமிழ் வார்த்தையா? என அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நெருக்கடியால் தான் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர்ந்தது என்று கூறுவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மோடிக்கு ஆதரவு இல்லை. ராகுலுக்கு தான் ஆதரவு என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் மு‌ஷரப் தெரிவித்துள்ளது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படாததால் இப்படி கூறி இருக்கலாம்“ என்றார்.


Next Story