பள்ளி மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய டிரைவருக்கு 12 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


பள்ளி மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய டிரைவருக்கு 12 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 13 March 2019 3:45 AM IST (Updated: 13 March 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய டிரைவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் வெள்ளைபிள்ளையார் கோவில் தெருவைச்சேர்ந்த காசிம் என்பவரது மகன் சையது(வயது 25). வேன் டிரைவரான இவர் கடந்த 2013-ம் ஆண்டு அதே ஊரைச்சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்துவான அந்த மாணவி திருமணத்துக்குப்பின் முஸ்லிமாக மதம் மாறினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அவர் தனது மனைவியையும், குழந்தையையும் தவிக்க விட்டு விட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவரது பெற்றோர் ஏற்பாட்டில் தலைவாசலை சேர்ந்த யாஸ்மினை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சையது மீது அவரது முதல் மனைவி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சையது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் இருதரப்பு வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி டி.லிங்கேஸ்வரன் அறிவித்திருந்தார்.

இதையொட்டி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் சையதுவை போலீசார் நேற்று ஆஜர்படுத்தினார்கள். சையதுவை குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். அப்போது, சையது, எனக்கு வயதான பெற்றோர் உள்ளனர். எனக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இப்போது எனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவர்கள் அனைவரும் எனது வருமானத்தில் தான் வாழ்கின்றனர். எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று முறையிட்டார்.

அவரிடம், நீ 2-வது திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு திருமணத்தின் போது வயது என்ன? என்று நீதிபதி கேட்டார். 15 வயது என்று சையது பதில் அளித்தார். மைனர் பெண்ணை திருமணம் செய்த உன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஏன் மீண்டும் வழக்குப்பதிவு செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபற்றி விசாரிக்குமாறு குழந்தைகள் நலக்குழுமத்துக்கு பரிந்துரைத்தார்.

பின்னர் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் தீர்ப்பை வாசித்தார். அதில் 14 வயது மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய குற்றத்துக்காக சையதுவுக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைதண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story