திண்டுக்கல்லில் பரபரப்பு: பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை


திண்டுக்கல்லில் பரபரப்பு: பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை
x
தினத்தந்தி 19 March 2019 5:00 AM IST (Updated: 19 March 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திண்டுக்கல் சோலைஹால் ரோடு நெட்டுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 25). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். நேற்று இரவு 9 மணிக்கு மேல் திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் உள்ள ஒரு கடையின் அருகில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கண்இமைக்கும் நேரத்துக்குள் சூரியபிரகாஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சூரியபிரகாஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி, போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சூரியபிரகாசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story