ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க கோவில் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரை,
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்கவும், கோவிலில் அடிப்படை வசதிகளை செய்து தரவும், வனம் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கோவில் சொத்துகள் எவ்வளவு, ஆக்கிரமிக்கப்பட்டவை எவ்வளவு என்று பதில் அளிக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பணீந்தர்ரெட்டி நேரில் ஆஜரானார். அவர், கோவில் ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்பது குறித்து விரைவான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை தாக்கல் செய்தார். மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், “தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் அதன் சொத்துகளை பாதுகாக்க வேண்டுமானால், கோவில் நிலங்கள், சொத்து விவரங்களை டிஜிட்டல்மயமாக்கி, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல, சொத்து விவரங்களை புத்தகமாக அச்சடித்து கோவிலில் பக்தர்கள் பார்வைக்கும், கோவில் அலுவலகத்திலும் வைக்க வேண்டும். இந்த புத்தகங்களை அந்தந்த பகுதிக்கு உட்பட்ட பத்திரப்பதிவு அலுவலக அதிகாரியிடம் கொடுத்து, அதில் உள்ள சொத்துகளை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்“ என தெரிவித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக, இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.