பள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் ரூ.4 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை


பள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் ரூ.4 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 March 2019 11:30 PM GMT (Updated: 20 March 2019 9:17 PM GMT)

பள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் சென்னை நகைக்கடையில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை தேர்தல் அதிகாரிகள் உத்தரவுபடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளிப்பட்டு,

தமிழகத்தில் ஏப்ரல் 18–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் ஆந்திர மாநிலத்திலும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தமிழக எல்லை முடிந்து ஆந்திர எல்லை தொடங்கும் பள்ளிப்பட்டு என்ற இடத்தில் ஆந்திர மாநில போலீசாரால் சோதனைசாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்தலையொட்டி தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக வாகனங்களை சோதனையிட்டு பணம், நகைகளை கைப்பற்றி வருகிறார்கள். இதனையடுத்து தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநில எல்லைக்குள் நுழையும் வாகனங்களை நிறுத்தி பள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் இரவும், பகலும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி வந்த ஒரு வாகனத்தை போலீசார் நிறுத்தும்படி சைகை காண்பித்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர், வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ தங்க நகைகளும், வைர நகைகளும் இருந்தன.

அவற்றின் மதிப்பு ரூ.4 கோடி என்று தெரியவந்தது. இவை சென்னையில் உள்ள ஒரு தங்கநகைகடையில் இருந்து திருப்பதியில் உள்ள 13 கடைகளுக்கும், நெல்லூரில் உள்ள 10 கடைகளுக்கும் வினியோகம் கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவின்படி அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை சித்தூர் அரசு சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Next Story