காட்டு யானை தாக்கி சத்துணவு பணியாளர் சாவு


காட்டு யானை தாக்கி சத்துணவு பணியாளர் சாவு
x
தினத்தந்தி 22 March 2019 4:30 AM IST (Updated: 22 March 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி சத்துணவு பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குடிசையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யூர் அருகே உள்ள கெத்தளி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ராஜம்மாள் வனப்பகுதியை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காட்டு யானைகள் சென்று கொண்டிருந்தன. அதில் ஒரு யானை ராஜம்மாளை நோக்கி ஓடி வந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த யானை அவரை விடாமல் துரத்தியது. பின்னர் அது ராஜம்மாளை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே அப்பகுதி மக்கள் ராஜம்மாளின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் ராஜம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட வன அலுவலர் தீபக்பில்கி உத்தரவின் பேரில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story