காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆனைமலை,
ஆனைமலையைச் சேர்ந்தவர் உபயத்துல்லா. இவரது மகன் ரியாஸ் என்கிற முகமது ஷெரீப் (வயது 33). புகைப்படக்காரர். இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி நள்ளிரவில் இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முகம்மது ஷெரீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலைபார்த்து வந்த முகமது ஷெரீப் சமீபத்தில் சொந்தமாக ஸ்டுடியோ வைத்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முகமது ஷெரீப்பின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடனடியாக அவர்களது மதத்திலேயே ஒரு பெண்ணை பார்த்து முகம்மது ஷெரீப்புக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் முகமது ஷெரீப் தனது காதலியுடன் பழகிவந்துள்ளார். இந்நிலையில்தான் அந்த பெண் கர்ப்பம்ஆனார். இது குறித்து செல்போனில் வந்த குறுஞ்செய்தி மூலம் முகமது ஷெரீப்பின் மனைவிக்கு தெரியவந்தது. இதைப்பார்த்ததும் அவர் கோபித்துக்கொண்டு தனது குழந்தையையும் அழைத்துக்கொண்டு பொள்ளாச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதனால் மனம் உடைந்த முகமது ஷெரீப் சம்பவத்தன்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பிறகு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். முன்னதாக தான் தற்கொலை செய்து கொள்வது குறித்து விரிவாக பேசி அந்த வீடியோவை தனது மனைவிக்கும், தனது ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் ஊழியருக்கும் செல்போனில் அனுப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.