ஊட்டி–மேட்டுப்பாளையம் இடையே இயற்கை எழில் காட்சிகளுடன் மலை ரெயில் பெட்டிகள் சோதனை ஓட்டம் வெற்றி


ஊட்டி–மேட்டுப்பாளையம் இடையே இயற்கை எழில் காட்சிகளுடன் மலை ரெயில் பெட்டிகள் சோதனை ஓட்டம் வெற்றி
x
தினத்தந்தி 24 March 2019 4:30 AM IST (Updated: 24 March 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி–மேட்டுப்பாளையம் இடையே இயற்கை எழில் காட்சிகளுடன் கூடிய மலை ரெயில் பெட்டிகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

ஊட்டி,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1908–ம் ஆண்டு முதல் ஊட்டி மலை ரெயில் இயக்கப்பட்டது. ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை ரெயில் பாதை 46.61 கிலோ மீட்டர் தூரம் ஆகும். அதில் 212 வளைவுகள், 16 குகைகள், 31 பெரிய பாலங்கள், 219 சிறிய பாலங்கள் உள்ளன. கடந்த 2005–ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயில் மற்றும் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. சுற்றுலா பயணிகளுக்காகவே ஊட்டி மலை ரெயில் சேவை வழங்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரெயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 3 ரெயில் பெட்டிகள் இயற்கை எழில் காட்சிகளுடன் அமைக்கப்பட்டு, அவை மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நவீனப்படுத்தப்பட்ட 3 புதிய பெட்டிகளுடன் மலை ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. கடந்த 1997–ம் ஆண்டு மகாராஜா கோச் முக்கிய பிரமுகர்களுக்காக இணைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த கோச்சும் ஊட்டி மலை ரெயிலுடன் பொலிவுப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று குன்னூரில் இருந்து ஊட்டிக்கு அந்த மலை ரெயில் வந்தது. 2 குளிர்சாதன பெட்டிகள், ஒரு சாதாரண பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது.

இந்த 3 பெட்டிகளின் இருபுறமும் இயற்கை எழில் மிகுந்த தேயிலை தோட்டங்கள், காடுகள் நடுவே காட்டு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை, நீலகிரி வரையாடு, லங்கூர் குரங்கு, பறவைகள் போன்றவற்றின் படங்கள் இடம் பெற்று உள்ளன. ஒரு குளிர்சாதன பெட்டியில் கழிப்பறை வசதி செய்யப்பட்டு உள்ளது. 126 இருக்கைகள் உள்ளன. சொகுசு இருக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து மாலையில் ரெயில் குன்னூருக்கு சென்றது. இதில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் குல்சேத்ரா, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுபராவ் மற்றும் அதிகாரிகள் சென்றார்கள். அவர்கள் கேத்தி, அருவங்காடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களை ஆய்வு செய்தனர். வருகிற ஏப்ரல் மாதம் கோடை சீசனில் இயற்கை எழில் காட்சிகளுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்ட மலை ரெயில் ஊட்டி–மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story