அதிருப்தியாளர்களை சரிகட்டும் பணியில் காங்கிரஸ்– என்.ஆர்.காங்கிரஸ்
அதிருப்தியாளர்களை சரிகட்டும் பணியில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசும், என்.ஆர்.காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகின்றன. காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கமும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரான நாராயணசாமியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக புதுவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதற்கிடைய அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சரிகட்டும் பணியும் தொடங்கியுள்ளது. அதேபோல் அடுத்த கட்சிகளில் அந்த கட்சி தலைமை, நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் அணிக்கு கொண்டு வரும் பணிகளையும் ஓசையின்றி செய்யும் திரைமறைவு வேலைகளும் தொடங்கிவிட்டன.
இதேபோல் எந்த கட்சியினையும் சாராமல் உள்ள முக்கிய பிரமுகர்களையும் வளைக்கும் வேலையும் நடந்து வருகிறது. இதற்காக இருகட்சிகளிலும் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லால் பிற கட்சிகளில் இருக்கும் முக்கிய பிரமுகர்களையும் இழுப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. குறிப்பாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.