நாட்டை ஆண்டவர்களும், ஆளத் துடிப்பவர்களும் மக்களை தனியே சந்திக்க பயப்படுகிறார்கள் சீமான் தாக்கு
நமது நாட்டை ஆட்சி செய்தவர்களும், ஆட்சிக்கு வர துடிப்பவர்களும் மக்களை தனியே சந்திக்க பயப்படுகிறார்கள் என்று கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் கட்சிகளை தாக்கி சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலிலும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் வேட்பாளர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள். அதன்படி புதுவை நாடாளுமன்ற தேர்தலில் சர்மிளா பானுவும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் கவுரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் புதுச்சேரி சுதேசி மில் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு வேட்பாளர்கள் சர்மிளா பானு, கவுரி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது:–
நாட்டில் பலமுறை தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் ஆட்சி மாற்றத்துக்கு வந்தவர்கள் இல்லை. அடிப்படை அரசியல் மாற்றத்தில் புரட்சி செய்ய வந்தவர்கள்.
நமது நாட்டை ஆண்ட கட்சிகளும், ஆளத்துடிக்கும் கட்சிகளும் மக்களை தனியே சந்திக்க பயப்படுகிறார்கள். கூட்டணி வைத்துக்கொண்டு சந்திக்கிறார்கள். ஆனால் தேர்தலை தொடர்ந்து தனித்து சந்திக்கும் இயக்கம் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.
பிரதமர் பதவியை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுழற்சி முறையில் வழங்க வேண்டும். ஜனாதிபதியையும் மக்களால் தேர்ந்தெடுக்கும் முறைக்கு கொண்டு வர வேண்டும். அரசியல் வேண்டாம் என விலகி நிற்கக்கூடாது. தேர்தலில் 50 முதல் 60 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகிறது. உங்களது எதிர்ப்பைக் காட்ட கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை.
அரசியல்வாதிகளை பிடிக்கவில்லையா, நீங்களே தலைமையேற்று புதிய அரசியலை கட்டமைக்க வேண்டும். நீங்கள் ஒதுங்கி நின்றால் அது தேசத்துக்கு இழைக்கும் துரோகமாகும். அரசியல் ஒரு சாக்கடை என்றால் அதனை நல்லவர்களால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு எது தேவை என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.
காங்கிரஸ், பாரதீய ஜனதா, அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய அனைத்து கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டவை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றை ஒரே இரவில் அமல்படுத்தியவர்கள், மதுஒழிப்பை ஒரே நாளில் அமல்படுத்தலாம். அவர்கள் ஏன் அதை செய்யவில்லை.
நரேந்திர மோடிக்கு மாற்று ராகுல்காந்தி அல்ல. நிலவளம் சார்ந்த பொருளாதாரத்தை கட்டமைப்போம். விவசாயத்தை அரசு வேலையாக மாற்றுவோம். இயற்கை உரத்தில் பயிர்களை வளர்ப்போம். மதுக்கடைகளை ஒழிப்போம். உலக வரலாற்றிலேயே கவர்னரை எதிர்த்து முதல்–அமைச்சர் போராடியது புதுச்சேரியில்தான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.