சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு 10 பவுன் தங்கம் பரிசு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு 10 பவுன் தங்கம் பரிசு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 7:07 PM GMT)

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு 10 பவுன் தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தனை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் பூண்டிரிங் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை அறிமுகம் செய்து வைத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–

அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், மாணவர்கள் பயன்பெறக்கூடிய பல நல்ல திட்டங்களை தந்துள்ளது. திருப்பூரில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை தந்து, சாயப்பட்டறை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதால்தான் தொழில் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை உள்ளடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்காக அயராது நாம் பாடுபட வேண்டும். இந்த 6 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத்தரும், சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.நிர்வாகிகளுக்கு 10 பவுன் தங்கம் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது ‘‘ திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கோட்டை. இங்கு கம்யூனிஸ்டுகள் போட்டியிடுகிறார்கள். கம்யூனிஸ்டுகளால் திருப்பூர் தொழில் நலிவடைந்தது. திருப்பூரில் நலிவடைந்த பனியன் தொழிலை மீட்டெடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. எனவே தொழில் வளர்ச்சி பெறவும், மக்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தவும், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்றார்.

இந்த கூட்டத்தில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், முன்னாள் மண்டல தலைவர்கள் ஜெ.ஆர். ஜான், கருணாகரண், கணேஷ், பட்டுலிங்கம், த.மா.கா. ரவிக்குமார், மோகன் கார்த்திக், செழியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story